தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இயல்பு நிலைக்கு திரும்பியதா பொன்னமராவதி?

புதுக்கோட்டை: பொன்னமராவதியில் இயல்பு நிலை விரைவில் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னமராவதி

By

Published : Apr 22, 2019, 10:12 AM IST

இரண்டு இளைஞர்கள் தேர்தல் வாக்கு சேகரிப்பு குறித்தும், தேர்தல் நிலவரம் குறித்தும் பேசுகையில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை கொச்சைப்படுத்தும் விதமாகவும் அந்த இனத்தின் பெண்களை ஆபாசமாகவும் பேசிய ஆடியோ வாட்ஸ் ஆப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த இளைஞர்களை கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்ட சமுதாய மக்கள் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் நடத்திய தடியடியால் மக்கள் கல்வீச்சு செய்தனர். இதனால் அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து, புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது தஞ்சை, திருவாரூர், திண்டுக்கல், மதுரை, திருச்சி என இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேற்று ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்காக அச்சமுதாய மக்கள் திரண்டிருந்தார்கள்.

தொடர்ந்து, காவல் உயர் அதிகாரிகள் மற்றும் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை தொடர்புகொண்டு சாலை மறியல் போன்றவற்றை செய்து பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் மற்ற மக்களிடமிருந்து வெறுப்புதான் ஏற்படும் எனவே இந்த விவகாரம் தொடர்பாக அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்க அறிவுறுத்தப்பட்டது. இதனால் பெருமளவில் நடக்க இருந்த ஆர்ப்பாட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன

தொடர்ந்து, இந்த பிரச்னையில் இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் ஏடிஎஸ்பி இளங்கோவன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். பிரச்னைக்குரிய அந்த ஆடியோவில் பேசியிருக்கும் விஷயங்களை வைத்து அந்த ஆடியோ புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்ட எல்லைப் பகுதியான திருவோணம், ஊரணிபுரம் ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட பகுதியில்தான் பேசப்பட்டிருக்கும் என்ற கோணத்திலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பொன்னமராவதி பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதாலும் ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலும் பேருந்துகள் ஒன்றிரண்டு மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் அந்த பேருந்துகளிலும் பொதுமக்கள் யாரும் பயணிக்கவில்லை. இந்நிலையில், பொன்னமராவதி மட்டுமல்லாது அந்த ஒன்றியத்துக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் பாதிக்கப்பட்டிருந்த இயல்பு வாழ்க்கை தற்போது மெல்ல மெல்ல திரும்பி வருவதாக தெரிகிறது.

ABOUT THE AUTHOR

...view details