முன்பெல்லாம் குழந்தைகள் ஓடியாடி மகிழ்ச்சியாக விளையாடுவர். அப்படி விளையாடும்போது உடல் வலுவடைவதுடன் மனமும் புத்துணர்வுப் பெற்று சிந்திக்கும் ஆற்றலும் அதிகரிக்கும்.
ஆனால் தற்போது அந்தக் காலங்கள் எல்லாம் வரலாறு ஆகிவிட்டன. குறிப்பாக பச்சக்குதிரை, கண்ணாமூச்சி, கால்தாண்டி, பல்லாங்குழி, தாயம், நொண்டி, பரமபதம், கிட்டிப்புல், புட்டு கோலிகுண்டு, பம்பரம், நூத்தாங்குச்சி, கிச்சுகிச்சுதாம்பலம், பூப்பறிக்க வருகிறோம் போன்ற குழந்தைகளின் உடலுக்கும் மனதிற்கும் வலிமை அளிக்கக்கூடிய விளையாட்டுகளை எல்லாம் இருந்தன.
ஆனால், இப்போது உள்ள குழந்தைகள் தன்னைச் சுற்றி எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் விரும்புவது மொபைல் போனைத்தான். இதில் குழந்தைகள் மட்டுமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தற்போது மொபைலுக்கு அடிமையாகிவிட்டனர்.
அப்படி என்னதான் இருக்கு அந்த மொபைலில் என்று ஆத்திரத்தோடு குழந்தைகளிடம் கேள்வி கேட்கிறோமே தவிர, அதிலிருந்து மீளுவதற்கான வழியை நாம் கண்டறிய முற்படவில்லை. இன்றைய காலகட்டத்தில் ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவருமே பணிக்குச் சென்றுவருகின்றனர்.
குழந்தைகள் பள்ளி முடிந்ததும் சரி, விடுமுறை நாள்களிலும் சரி தனியாகவே இருக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அப்போது அவர்களுக்கு ஒரு துணையாக இருப்பது மொபைல் போன் மட்டுமே. இதனால் மொபைல் போனை விட்டு பிரியாது இருக்கவே ஆசைப்படுகின்றனர்.
இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி கண்கள் பாதிப்பு, சிறுநீரகம் பாதிப்பு, ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன், பேச்சின்மை, எதிலும் ஆர்வமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஒரு சில சமயங்களில் தற்கொலை எண்ணத்திற்குக்கூட தள்ளப்படுகின்றனர்.
இதில் கூடுதல் அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால், தமிழ்நாட்டில் சிறார் நீதி குழுமத்தில் 80 விழுக்காடு பிரச்னைகள் குழந்தைகள் மொபைல் போனை திருடிவிடுவதாக குற்றம் சுமத்தப்பட்டு மனநல ஆலோசனைக்கு அழைத்துவரப்படுகிறார்கள் எனத் தெரியவந்துள்ளது. அந்த அளவிற்கு மொபைல் போனின் மோகம் குழந்தைகளுக்கு அதிகமாகிவிட்டது.