புதுக்கோட்டை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலுள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர் எஸ்.ராமச்சந்திரன், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் நேற்று காலை (செப்.12) தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை விடிய விடிய நடைபெற்று தற்போது (செப்.13) இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டம், முத்துப்பட்டினத்தை சேர்ந்தவர் எஸ்.ஆர்.என்று அழைக்கப்படும் எஸ்.ராமச்சந்திரன். இவர் தமிழ்நாடு முழுவதும் 15 வருடத்திற்கு மேலாக அரசு மணல் ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். மேலும் இவருக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரி, கிரஷர், பால் உற்பத்தி நிலையம், கல்லூரிகள் என பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் அதிமுக ஆட்சி காலத்திலும் சரி, தற்போது திமுக ஆட்சி காலத்தில் சரி மணல் குவாரிகளை எடுத்து நடத்தி வருகிறார். இது தவிர முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் ஆகியோருடன் இணைந்து மிகப்பெரிய அளவில் சோலார் பவர் பிளான்ட் மற்றும் பல்வேறு அரசு ஒப்பந்தங்கள் எடுத்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க:அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு - ஆஜராகாத அமலாக்கத்துறையால் வழக்கு ஒத்திவைப்பு!
இந்த நிலையில், திமுக ஆட்சி வந்த பிறகும் அவர் தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளையும் பல்வேறு ஒப்பந்தங்களையும் எடுத்து பணியாற்றி வருகிறார். 2016 - 2017 ஆகிய வருடங்களில் சட்டத்திற்கு விரோதமாக பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டதாக அமலாக்கத் துறையினர் சோதனைகள் ஈடுபட்டு பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். மேலும் இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.