உணவிற்கு மதம் கிடையாது அனைவருக்குமே உணவு என்பது ஒன்றுதான் என்ற சொமெட்டோ நிறுவனத்தின் ட்விட்டர் பதிவு நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் எதிரொலியாக புதுக்கோட்டையில் உணவகம் நடத்தி வரும் ஒருவர் "மதம் பார்த்து வருபவர்களுக்கு இங்கு உணவு கிடையாது" என்ற பதாகையை வைத்துள்ளார். இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பாரட்டுகளை தெரிவித்துள்ளனர்.
மதம் பார்த்து வருபவர்களுக்கு இங்கு உணவு கிடையாது
புதுக்கோட்டை: மதம் பார்த்து வருபவர்களுக்கு எங்கள் உணவகத்தில் உணவு கிடையாது என்று பதாகை வைத்து புதுக்கோட்டை உணவக உரிமையாளர் அசத்தியுள்ளார்.
சொமெட்டோ செயலி மூலம் உணவு ஆர்டர் செய்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உணவு கொண்டு வருபவர் தனது மதம் கிடையாது என்று டெலிவரி வழங்குபவரை மாற்றக் கூறி சொமெட்டோ நிறுவனத்திடம் கூறியுள்ளார். இதற்கு அந்நிறுவனம் மறுத்துள்ளது. இதனால் ஆர்டரை ரத்து செய்து அதைப்பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனைக் கண்ட சொமெட்டோ நிறுவனம் உணவுக்கு மதம் என்பது கிடையாது. உணவு உண்ணும் அனைவருமே சமம்தான் என்ற பதிலை அவருக்கு பதிவிட்டிருந்தது. சொமெட்டோவின் இச்செயல் நாடு முழுவதிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனைக் கண்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த அருள்மொழி - உஷாராணி தம்பதியினர் தங்களது ஐங்கரன் உணவகத்தில் மதம் பார்த்து வருபவர்களுக்கு சாப்பாடு இல்லை என கடைக்கு வெளியே பதாகையை வைத்தனர். இதற்கு பெரும்பாலான மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.