'கோ4குரு' என்ற அமைப்பு இந்திய அளவில் அறிவியல் திறமை, பொது அறிவுப் போட்டியின் மூலம் மாணவர்களைத் தேர்வு செய்து அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வருகிறது.
கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் 2019ஆம் ஆண்டுக்கான போட்டியில், புதுக்கோட்டை மாவட்டம் ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவி ஜெயலட்சுமி தேர்வாகி இருக்கிறார்.
ஆதனக்கோட்டையைச் சேர்ந்த இவர், வருகின்ற மே மாதம் முதல் வாரத்தில் விஞ்ஞானம் சம்பந்தமான கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்ல இருக்கிறார். இதன் மூலம், மாணவி ஜெயலட்சுமிக்கு நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் விண்வெளி வீரர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அமெரிக்கா செல்வது ஒவ்வொருவரின் கனவாகவே இருந்து வருகிறது. மாணவி ஜெயலட்சுமி நாசா செல்வது புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே பெருமைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், கனவுகள் அனைத்தும் ஏழைப் பெண்களுக்கு எட்டாக் கனியாகவே இருப்பது கவலையைத் தருகிறது.
நாசா செல்லும் வாய்ப்பு கிடைத்தும் அமெரிக்கா செல்ல முடியாத நிலையில் ஏழ்மையில் சிக்கித் தவிக்கிறார், மாணவி ஜெயலட்சுமி. தமிழ்நாடு அரசு, கல்வித் துறை சார்பிலும் போதுமான உதவி செய்து வருகின்றனர். இருந்தாலும், மாணவியுடன் உறவினர் ஒருவர் சென்றுவர இருவருக்கும் நான்கு லட்சம் தேவைப்படுகிறது.
புதுக்கோட்டை மாணவி ஜெயலட்சுமி தனியார் நிறுவனம் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் தனக்கு உதவி செய்யுமாறு மாணவி ஜெயலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார். தோழமைகளோடு கைகோர்த்து, மாணவி ஜெயலட்சுமிக்கு ஆதரவு தர வேண்டும் என்பதே உறவினர்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது.
11ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஜெயலட்சுமி மத்திய, மாநில அரசு நடத்தி வந்த பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். சவகர் பிரிவிற்கான கட்டுரைப் போட்டியில் மாவட்டத்தில் முதலிடம், மாநில அளவிலான போட்டிகளில் முதலிடம், தமிழ்நாடு கல்வித் துறை சார்பில் நடைபெற்ற அறிவியல் விநாடி - வினா போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலிடம் மற்றும் மண்டல அளவில் மூன்றாம் இடம் என இவர் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளார்.
பரிசுகளும் சான்றிதழ்களும் பெற்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவி ஜெயலட்சுமி, நிச்சயம் நம் தாய்நாட்டிற்கும், சொந்த மாநிலத்திற்கும் பெருமை சேர்ப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நகல் எரிப்புப் போராட்டம்