பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இந்திய தொழிலாளர் கட்சியினர் கையிலும் வாயிலும் கறுப்புத் துணி கட்டிக்கொண்டு வந்திருந்தனர்.
பின்னர் கோரிக்கை மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர். அந்த மனுவில், "குன்னம் வட்டம் கீழப்புலியூர் கிராமத்தில் வசித்துவரும் ஆதி திராவிட மக்களுக்கு தனிப்பட்டா வழங்க வேண்டி நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக போராடிவருகிறோம்.
இது குறித்து பலமுறை குன்னம் வட்டாட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், கீழப்புலியூர் கிராமத்திற்கு மாலை 4.20-க்கு வரும் அரசுப் பேருந்து, மாணவ மாணவியரின் நலன்கருதி அரைமணி நேரம் தாமதித்து எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம்.
இது தொடர்பாக, பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் குன்னம் வட்டாட்சியர், அரசுப் போக்குவரத்து கழக மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவர்களது சம்பளத்தை பிடித்தம் செய்ய வேண்டும்" எனக் கூறியிருந்தனர்.
இந்தக் கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மேலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெறும் எனவும் அவர்கள் எச்சரித்தனர்.