நாமக்கல்: கரப்பாளையத்தை சேர்ந்த விவேகானந்தன் என்பவருக்கு 27 வயதான மனைவி இருந்தார். இவர் நேற்று முன்தினம் (மார்ச்.11) வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்காக வீட்டின் அருகே உள்ள ஓடை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராத நிலையில், மாலை ஆறு மணிக்கு ஆடுகள் மட்டும் வீட்டுக்கு தானாக திரும்பி வந்துள்ளன.
கணவர் விவேகானந்தன் தனது மனைவியைத் தேடிச் சென்றபோது, ஓடை அருகே முட்புதரில் முகம், கழுத்துப் பகுதியில் ரத்த காயங்களுடன் தனது மனைவி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து ஜேடர்பாளையம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அப்பெண் அணிந்திருந்த கவரிங் செயின் மற்றும் தங்கத்தோடு காணவில்லை என்று தெரிகிறது. அதேபோல் உடலில் பல்வேறு காயங்கள் இருந்துள்ளதால், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது நகைகளை திருடுவதற்காக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் இருந்த சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்து சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க முயன்றனர். ஆனால், சடலத்தை வாங்க மறுத்த அவரது உறவினர்கள், பெண்ணை கொலை செய்தது வட மாநில தொழிலாளர்கள்தான் என்று கூறி நாமக்கல் - மோகனூர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.