நாமக்கல் மாவட்டம், வேலக்கவுண்டம்பட்டி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு கடந்த ஆறு மாதமாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
குடிநீருக்காக காலிக்குடங்களுடன் ஆட்சியரிடம் முறையிட்ட கிராம மக்கள்!
நாமக்கல்: புதுப்பாளையம் கிராமத்திற்கு 6 மாதமாக குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து, அக்கிராம மக்கள் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள், ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.