தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100 கி.மீ. நடந்து வந்த மாணவர்களுக்கு சொந்த ஊர் திரும்ப உதவிய மனிதநேயர்கள்! - hyderabad to tamilnadu youngsters

நாமக்கல்: போக்குவரத்து வசதியில்லாமல் தவித்த கல்லூரி மாணவர்கள் அவர்களின் சொந்த ஊருக்குத் திருப்ப லாரி ஓட்டுநர்களும், காவல் துறையினரும் உதவிபுரிந்து தங்களின் மனித நேயத்தை காட்டியுள்ளனர்.

hyderabad to tamilnadu youngsters
hyderabad to tamilnadu youngsters

By

Published : Apr 19, 2020, 11:57 AM IST

Updated : Mar 1, 2021, 3:16 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த மே 3ஆம் தேதிவரை இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்துப் போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளதால், மக்கள் பெரிதும் சிரமங்களைச் சந்தித்துவருகின்றனர்.

குறிப்பாக, வயிற்றுப்பிழைப்பிற்காக அண்டை மாநிலம் சென்ற தொழிலாளர்கள் வேலையிழந்து, வாழ வழியின்றி தவிக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எப்படியாவது தங்களின் சொந்த ஊருக்குச் சென்றடைந்தால்போதும் என நினைத்து பலரும் நடைபயணமாகவே அவர்களின் இருப்பிடங்களுக்குப் படையெடுக்கின்றனர்.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஷாஜி, மெர்லின்ராஜ் ஆகிய இருவரும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, மேல்படிப்பிற்காக ஹைதராபாத்தில் தங்கிப் படித்துவந்தனர்.

ஊரடங்கு உத்தரவால் இவர்கள் பயின்ற கல்லூரியும் மூடப்பட்டது. இதனையடுத்து கடந்த 14ஆம் தேதிவரை மாணவர்கள் ஹைதராபாத்தில் தங்கியிருந்த நிலையில், ஊரடங்கு மே 3ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டதால், எப்படியாவது தங்களின் சொந்த ஊருக்குச் சென்றுவிட வேண்டும் என அவர்கள் முடிவெடுத்தனர்.

இதன் பின்னர் கடந்த 15ஆம் தேதி காலை 8 மணியளவில் ஹைதராபாத்திலிருந்து நடைபயணத்தை தொடங்கிய நிலையில், இவர்களின் உடமைகளைத் தூக்கிக்கொண்டு கடும் வெயிலில் 60 கி.மீ. தூரத்தை நடந்தே கடந்துள்ளனர். அதன் பின்னர் நடக்க முடியாமல் சோர்வடைந்த மாணவர்கள் இருவரும், நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து வாகன ஓட்டுநர்களிடமும் லிஃப்ட் கேட்டுள்ளனர்.

இவர்களின் கஷ்டத்தைப் புரிந்துகொண்ட மனிதநேயம் கொண்ட லாரி ஓட்டுநர் ஒருவர் இவர்களுக்கு லிஃப்ட் கொடுத்து, தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரியில் இவர்களை இறக்கிவிட்டுள்ளார். அதன்பின்னர் அங்கிருந்து 40 கி.மீ. தூரத்திற்கும் மேல் மீண்டும் நடைபயணமாக வந்த நிலையில், மற்றொரு லாரி ஓட்டுநர் ஒருவரின் உதவியின் மூலம் லாரியில் நாமக்கல் வந்தடைந்தனர்.

மாணவர்கள் சொந்த ஊர் திரும்ப உதவிய மனிதநேயர்கள்

இதையடுத்து நாமக்கல்லிலிருந்து மதுரையை நோக்கி நடந்து சென்ற மாணவர்களைத் தடுத்து நிறுத்திய நாமக்கல் மாவட்ட காவலர்கள், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், இருவரும் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதிக்குச் செல்வதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மாணவர்களின் நிலைமையைப் புரிந்துகொண்ட காவலர்கள் அவர்களுக்கு உணவளித்து, ஓய்வெடுக்க இடமும் கொடுத்துள்ளனர். இதன் பின்னர் லாரி மூலம் மாணவர்கள் இரண்டு பேரும் அவர்களின் சொந்த ஊரான மார்த்தாண்டம் பகுதிக்குச் செல்ல நாமக்கல் காவல் ஆய்வாளர் செல்வராஜ் உள்ளிட்ட காவலர்கள் இவர்களுக்கு உதவிபுரிந்துள்ளனர்.

போக்குவரத்து வசதியில்லாமல் ஹைதராபாத்தில் அவதிப்பட்டு தமிழ்நாடு வந்தடைந்த கல்லூரி மாணவர்களுக்கு ’காவல் துறை உங்கள் நண்பன்’ என்ற சொல்லுக்கு ஏற்ப உதவிய காவலர்களின் மனிதநேயத்திற்குப் பலரும் பாரட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:கோவையிலிருந்து திருப்பூருக்கு கைக்குழந்தையுடன் நடந்தே சென்ற தம்பதி...!

Last Updated : Mar 1, 2021, 3:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details