தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், மகாராஷ்டிராவில் இருந்து லாரிகள் மூலம் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு இன்று (டிசம்பர் 16) வந்தன. இவற்றை மாவட்ட ஆட்சியர் மெகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மகாராஷ்டிராவிலிருந்து கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்
நாமக்கல்: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் நாமக்கல்லுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
முதல்கட்டமாக, வாக்கு பதிவாகும் 250 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், இவிம் எனப்படும் 2670 வாக்களிக்கும் இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை திரையில் அறிவிக்கும் 2820 விவிபேட் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த இயந்திரங்கள் அனைத்தும் தேர்தல் அலுவலர்களின் பரிசோதனைக்கு பிறகு, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் அடுக்கி வைக்கப்பட்டன.
தேவையான இயந்திரங்கள் வந்தவுடன் பெல் நிறுவனங்களின் பொறியாளர்கள் முன்னிலையில், அனைத்து இயந்திரங்களையும் இயக்கி அதில் உள்ள பழைய தகவல்கள் அழிக்கப்பட்டு, புதுப்பிக்கப்படும் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.