நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கபிலர்மலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 117 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 ஆயிரத்து 211 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன.
திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்தது. விவசாயம், தொழிற்சாலைகள் இதன்மூலம் பாதிக்கப்பட்டன. ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன் மூன்று ஆண்டில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக உள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் பெட்சீட்டை போட்டு உட்காந்து கொண்டு பெட்டியை வைத்து மனு வாங்குகிறார். அந்தப் பெட்டியை கொண்டுபோய் வீட்டில் வைத்து திறந்து பார்த்து குறை தீர்ப்பாராம். அதிமுக ஆட்சியில் அவர் மனு வாங்கி என்ன செய்யப்போகிறார். துணை முதலமைச்சராக இருந்தபோது இதுபோன்று மனுக்கள் வாங்காதது ஏன்.