இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”குழந்தைகள் விற்பனை தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் பெற்றோர்கள் விருப்பப்பட்டே குழந்தைகளை கொடுத்துள்ளதாக சம்பந்தப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். குழந்தைகள் காப்பகம், அனாதை இல்லங்களில் இருந்து எந்த குழந்தையும் விற்பனை செய்யப்படவில்லை. மக்கள் விருப்பப்பட்டு குழந்தைகளை கொடுத்திருந்தாலும் அது தவறுதான். இதுகுறித்து முழு விசாரணை நடத்தப்படும். குழந்தைகளை கொடுப்பவர்களும், வாங்குபவர்களும் சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும்.
பெற்றோர் விருப்பப்படியே குழந்தைகள் விற்பனை நடந்துள்ளது: நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
நாமக்கல்: பெற்றோர்கள் சம்மதத்துடனேயே குழந்தைகள் விற்கப்பட்டதாக நாமக்கல் குழந்தைகள் விற்பனையில் சம்பந்தப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் கூறியுள்ளார்.
சட்டத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை விற்பனை தொடர்பாக 3 தனிப்படை அமைக்கபட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இறுதிவரை விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை காரா சிஸ்டம் மூலமாக 5 குழந்தைகளை தத்தெடுத்துள்ளனர். பெற்றோர்கள் தவறு செய்துள்ளனர். சட்ட ரீதியாக குறுக்கு வழியில்லாமல் குழந்தைகளை ஒரு பைசா இல்லாமல் தத்தெடுக்க முடியும்.
குறுக்கு வழியை ஏன் நாட வேண்டும். தவறு என்று தெரிந்தே பொதுமக்கள் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம் எளிமையாக குழந்தை பேறு அற்றவர்கள் தாங்கள் விரும்பிய குழந்தைகளை தத்தெடுக்கலாம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்” என்றார்.