கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக அறிய முடிகிறது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் மெகராஜ், “காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உற்பத்தி செய்யும் அத்தியாவசிய பொருட்களை வெளியிடங்களுக்கு செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் துணை நிற்கும். அதற்கு அவர்களது வாகனங்கள், பணியாளர்களுக்கு அடையாள அட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படும்.
வெளிநாடுகளில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த 647 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சென்ற லாரி ஓட்டுநர்கள், ரிக் தொழிலாளர்கள் அனைவருக்கும் உதவ மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது. அவர்கள் உரிய தகவல் அளித்தால், அவர்கள் சிக்கியிருக்கும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரப்படும். அதே போல் இங்குள்ள வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்” என தெரிவித்தார்.