நாகப்பட்டினம்:மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாநில துணைத் தலைவர் கி.காசிராமன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் ஏற்கெனவே கடலோர கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அப்பகுதியில் உள்ள 25க்கும் மேற்பட்ட கிணறுகளைத் தூர்வாரி, மக்கள் பயன்பாட்டுக் கொண்டு வந்துள்ளார்.
அதுமட்டுமின்றி, தனது வீட்டு வாசலில் குடிநீரை சுத்திகரித்து கிராம மக்களுக்கு வழங்கி வருகிறார். இந்நிலையில், தருமதானபுரம், மணக்குடி, வள்ளாலகரம் ஊராட்சிகளில், இன்று தான் போட்டியிடும் விவசாயி சின்னத்திற்கு திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, மக்களிடம் மண் வளம், நீர் வளத்தை பாதுகாக்க வலியுறுத்தி, அவரவர் பகுதிகளில் உள்ள கருவேல மரங்களை பொதுமக்கள் தாங்களே முன்வந்து அகற்றிவிட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வள்ளாலகரம் ஊராட்சி, ஆத்துக்குடி கிராமத்தில் கருவேல மரங்களை வெட்டி அகற்றினர்.