தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேட்பாளருடன் காலம் கடந்து வந்த டிடிவி தினகரன்

நாகை: நாகையில் வேட்பாளருடன் காலம் கடந்து 10.15 மணிக்கு வந்த தினகரன், தேர்தல் நடத்தை விதி முறையைக் கருத்தில் கொண்டு பேசாமல் சென்றது தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

By

Published : Apr 11, 2019, 8:25 AM IST

டிடிவி தினகரன்

நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும், அமமுக வேட்பாளர் செங்கொடிக்கு வாக்கு கேட்டு அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நாகையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருந்தார். இந்நிலையில் இரவு பத்து மணியை கடந்தும் பரப்புரை பொதுக் கூட்டத்திற்கு டிடிவி தினகரன் வராததால், பரப்புரையைக் கேட்க அழைத்துவரப்பட்ட அமமுக-வைச் சேர்ந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்து, அங்கிருந்து ஒவ்வொருவராக கலைந்து சென்றனர்.

இதனை அறிந்த பொறுப்பாளர்கள், பெண்களை ஓரிடத்தில் அமர வைக்க படாதபாடு பட்டனர். அதனை பொருட்படுத்தாத பெண்கள் அங்கிருந்து அவசரம் அவசரமாக வெளியேறினர். இதனிடையே பரப்புரை இடத்திற்கு வந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களும், போலீசாரும் அங்கிருந்த அமமுக பொறுப்பாளர்களிடம், தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தி ஒலிபெருக்கிகளை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து, ஒலிபெருக்கியை நிறுத்தியவர்கள் பரப்புரை இடத்தை விட்டு கலைந்து செல்லாமல், டிடிவி தினகரனை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இதனிடையே திருவாரூரில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு நாகைக்கு 10:15 மணியளவில் காலம் கடந்து வேட்பாளருடன் வந்து சேர்ந்த தினகரன், தேர்தல் நடத்தை விதி முறையை கருத்தில் கொண்டு எதுவும் பேசாமல் மௌனமாக தொண்டர்கள் கொடுத்த சால்வையை மட்டும் பெற்றுக்கொண்டு அமைதியாக மயிலாடுதுறைக்கு புறப்பட்டுச் சென்றார். இதனால் அக்கட்சியினர் டிடிவி தினகரன் பேச்சை கேட்க முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details