நாகை மாவட்டம் சீர்காழியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு அரசு குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்கு போதிய முயற்சிகளை மேற்கொண்டதாகத் தெரியவில்லை. முதலமைச்சர் உட்பட அமைச்சர்களின் வீடுகளுக்குத் தண்ணீர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டு வழங்கப்படுகிறது.
ஆனால், சாதாரண மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. மாநில அரசு இதில் மெத்தனம் காட்டாமல் விரைந்து போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசும் காலம் தாழ்த்தாமல் தமிழ்நாடு மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்றார்.
மேலும், திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக திருச்சி மாவட்ட திமுக செயலாளர் கே.என். நேரு வெளியிட்ட கருத்து குறித்து பேசிய அவர்,
“மக்களவை-சட்டப்பேரவைத் தேர்தல் வேறு, உள்ளாட்சி மன்றத் தேர்தல் வேறு. இந்தத் தேர்தல்கள் அனைத்தும் வெவ்வேறு பின்னணி கொண்டவை. ஆகவே, இப்படிப்பட்ட கருத்துகள் அவ்வப்போது வெளிவரும். ஆனாலும் நாட்டு மக்களின் நலன் கருதி ஒருமித்த முடிவை எடுக்க வேண்டிய பொறுப்பில் திமுக தலைமை உள்ளது.
கூட்டணி சிதறாமல் உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றையும் ஒன்றுபட்டு சந்திப்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்திற்கே நல்லது என்று விடுதலைச் சிறுத்தைகள் நம்புகிறது.
அந்த அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலின் சிந்தித்து நல்ல முடிவை எடுப்பார் என்று நான் பெரிதும் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.