சீர்காழி ரயில் நிலையம் அருகே பொது விநியோக திட்ட மண்ணெண்ணெய் வழங்கும் நிலையம் இயங்கிவருகிறது. நகர் பகுதியைச் சேர்ந்த 24 வார்டுகளுக்கும் சுழற்சி முறையில் இயந்திரத்தின் மூலம் மண்ணெண்ணெய் வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த ஆண்டு அந்த இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. அதனைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படாததால் தற்போதுவரை ஊழியர்கள் மிகுந்த சிரமத்துடன் கையால் அளந்து மண்ணெண்ணெயை வழங்கி வருகின்றனர்.
கடந்த மாதம்வரை குடும்ப அட்டை ஒன்றுக்கு 1.5 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்ட நிலையில், இந்த மாதம் ஒரு லிட்டர் மட்டுமே வழங்கப்பட்டது.
இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து அங்குள்ள அலுவலர்களிடம் கேட்டபோது போதிய இருப்பு இல்லாததால் இவ்வளவுதான் வழங்க முடியும் என தெரிவித்தனர்.
நீண்ட வரிசையில் மண்ணெண்ணெய் வாங்க காத்திருக்கும் பொதுமக்கள் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் அடுத்த மாதம் அதுவும் வழங்கப்படாது எனவும் சீர்காழி முழுவதும் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால், மண்ணெண்ணெய் வழங்கும் நிலையத்தில் இதுவரை மண்ணெண்ணெய் வாங்காத நபர்களும் வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணெய் வாங்கிச் சென்றனர்.
இதுகுறித்து பொருள் வழங்கல் துறை அலுவலர்களிடம் கேட்டபோது, "மாதந்தோறும் அரசு 6,000 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கும் நிலையில், இந்த மாதம் 5,000 லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கியுள்ளது.
அனைவருக்கும் அதனை பகிர்ந்தளிக்கும் பொருட்டு ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு லிட்டர் வீதம் வழங்கப்பட்டுவருகிறது. அடுத்த மாதத்துடன் விநியோகம் நிறுத்தப்படும் என பரவும் தகவல் தவறானது" என்றனர்.