நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே முடிகண்டநல்லூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றங்கரையில், அரசு மணல் குவாரி இயங்கிவருகிறது. இங்கு இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகளில் மணல் ஏற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
வழக்கமாக மணல்மேடு சுற்றுவட்டார கிராமங்களுக்கு, சிறிய அளவிலான மணல் தேவைகளுக்கு மாட்டு வண்டிகளில் ஏற்றி விற்பனை செய்யப்படும். ஆனால், இந்த ஆண்டு குவாரியில் இருந்து மணல் ஏற்றுவதற்கு மாட்டு வண்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அனுமதி மறுத்த பிறகும், சுற்றுவட்டார கிராமங்களில் சிறிய அளவிலான மணல் தேவைகளுக்கு அப்பகுதி மாட்டு வண்டி உரிமையாளர்கள் அனுமதியின்றி மணல் எடுத்துச் செல்வது வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளத்துரை உத்தரவின் பேரில் மணல்மேடு காவல் துறையினர் பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து ரோந்துப் பணி மேற்கொண்டு மணல் திருட்டை தடுத்து வருகின்றனர்.
அதையும் மீறி நேற்று தங்கள் மாட்டு வண்டியில் தலா அரை கட்டு வீதம் மணல் ஏற்றிய ராஜேஷ்கண்ணா, இளங்கோவன், தினகரன், கலியபெருமாள், அசோக்குமார், வெங்கடேசன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.