மயிலாடுதுறை: ஆற்றில் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் மயிலாடுதுறை அருகே ஆனந்தாண்டவபுரம் சாலையிலுள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்படுவது வழக்கம்.
இச்சூழலில் 14ஆவது வார்டு பகுதியிலுள்ள கிட்டப்பா பாலம் அருகே காவிரி ஆற்றங்கரையோரம் பல வருடங்களுக்கு மேலாக குப்பைகளை நகராட்சி நிர்வாகமே கொட்டிவருகிறது.
இச்சூழலில், 14,15,16 உள்ளிட்ட வார்டுகளில் சேரிக்கப்படும் குப்பைகளை இங்கு கொட்டுவதால், மலை போல் குப்பைகள் இங்கு தேங்கியுள்ளது.
மேலும் குப்பைகளை கொளுத்திவிடுவதால் புகை மூட்டம் ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் வசிப்போர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கூடுதலாக துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மாப்படுகை கிட்டப்பா பாலத்தில் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக நகராட்சி நிர்வாகத்தினர் இங்கு குப்பை கொட்டுவதை கைவிடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்களை எழுப்பினர்.
ஆற்றை சீரழிக்கும் குப்பைகள் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சாலை மறியல்! அவர்களிடம் காவல் துறையினரும், நகராட்சி அலுவலர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் நேரில் வந்து குப்பையை கொட்டமாட்டோம் என உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் எனக்கூறி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.