நாகை மாவட்டம் பூம்புகார் காவிரி ஆற்றில் கல்லெடுத்து ராசி மணலில் அணை கட்டுவதற்கான விழிப்புணர்வு வாகனப் பயணம் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் தொடங்கியது. பூம்புகார் கடலில் காவிரி ஆறு கலக்கும் காவிரி சங்கமத்தில் கல்லெடுக்கப்பட்டு சிறப்பு யாகம், பூஜை ஆகியவை நடைபெற்றது. பின்னர், தருமபுர ஆதீன கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் கல் எடுத்துக் கொடுத்து விழிப்புணர்வு வாகனப் பயணத்தை தொடங்கிவைத்தார்.
பி.ஆர். பாண்டியன், பல்வேறு விவசாயிகள் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் தலையில் கல்லை சுமந்து கொண்டு காவிரி சங்கமத்தில் இருந்து பூம்புகார் பேருந்து நிலையம் வரை நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அங்கு நடைபெற்ற காவிரிக்கு மாற்று காவிரியே என்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகள் கலந்துரையாடினர். அதைத் தொடர்ந்து ராசிமணல் நோக்கி பரப்புரை வாகனப் பயணம் தொடங்கியது.
நாகையில் செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர். பாண்டியன் அப்போது செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர். பாண்டியன், கர்நாடகம் நல்ல புத்தியோடு ராசி மணலில் அணை கட்டவும், மேகதாதுவில் அணை கட்டுவதை கைவிடவும் முன்வரவேண்டும். தமிழர், கன்னடர் என்கின்ற வேற்றுமை மறந்து அரசியல் கட்சியினர் பாகுபாடு இன்றி ராசி மணலில் அணை கட்ட முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும் காமராஜர் ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு கருணாநிதி ஆட்சியில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் கருத்தில் கொண்டு ராசி மணலில் அணை கட்ட வேண்டும் என்கின்ற கோரிக்கையோடு இந்த விழிப்புணர்வு வாகனப் பயணம் தொடங்கி உள்ளதாகவும் கூறினார்.