நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கத்திரிப்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த நாய் பாக்கியலட்சுமியின் வீட்டு வழியே செல்லும் நபர்களைப் பார்த்து குரைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நாகக்குடையானை கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் என்பவர், இரு சக்கர வாகனத்தில் சென்றபோது அவரை பார்த்து நாய் குரைத்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மதியழகன் நாயை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் நாய் மீது குண்டுபடாமல் நாய் நல்வாய்ப்பாக தப்பியோடியது.
இச்சம்பவம் குறித்து பாக்கியலட்சுமி கரியாப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மதியழகனைக் கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனர்.