மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் ஊராட்சியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அரசுக்குச் சொந்தமான சௌரியாபுரம் பொட்டல்வெளி திடலில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்தப் பகுதியில் வீடு இல்லாத ஏழை, எளிய குடும்பத்தினர் 27 பேருக்கு வருவாய் துறையினர், கடந்த 2016ஆம் ஆண்டு இடம் வழங்கி பட்டா அளித்ததன் பேரில், அங்கு சிலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஊராட்சியில் தினந்தோறும் இரண்டு டிராக்டருக்கு மேல் சேகரிக்கப்படும் குப்பைகள் மழை காரணமாக, கடந்த நான்கு மாதங்களாக தரம் பிரிக்கப்படாமல் அப்பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. இதன் காரணமாக, சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி பொது மக்கள் போராட்டம் நடத்தியதால், குப்பைகளை கொட்டுவதற்கு மற்றொரு இடம் தேர்வு செய்யப்பட்டது.
ஆனால், அங்கேயும் குப்பையை கொட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் குப்பையை ஊராட்சி நிர்வாகத்தினர் பொட்டல்வெளி திடலில் கொட்டுவதற்காக டிராக்டரில் எடுத்து வந்தனர். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, குப்பையுடன் வந்த டிராக்டரை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.