நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இதில் ஒரு பகுதியாக,நாகப்பட்டினம் நாடாளுமன்றத்தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து திராவிட கழகம் சார்பில் நாகையில் நேற்று பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராசு உள்ளிட்ட தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம், மாலை 4 மணியளவில் நடைபெறுவதாக அறிவித்திருந்தனர். ஆனால் சுமார் 2 மணி நேரம் காலதாமதமாகவேகூட்டம் தொடங்கியது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பல கட்சிகள் இருந்தும், இக்கூட்டத்தில் அவர்கள் யாரும் பெருமளவில் பங்கேற்கவில்லை.திராவிட கழகத்தொண்டர்களே மேடையின் முன்புறம் அமர்ந்திருந்தனர்.மதசார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணி இத்தொகுதியில் வெற்றி பெறும் என கூறப்படும் நிலையில், கூட்டணி கட்சித்தொண்டர்கள் பெருமளவில் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் தொண்டர்கள் அமருவதற்காக மேடையின் எதிரே போடப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட நாற்காலிகள் வெறிச்சோடி காணப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.