தமிழ்நாடில் கரோனா வைரஸின் பாதிப்பால் நேற்று மாலை முதல் தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்குவதற்காக குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது. மாலை ஆறு மணியுடன் கடை மூடப்படும் என்பதால் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு முண்டியடித்து மதுபானங்களை மொத்தமாக வாங்கி சென்றனர். கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரிசையில் நின்று ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டு மதுபானங்களை வாங்கி செல்ல வேண்டும் என்று அறிவுறுத்திய விதிகளை, காற்றில் பறக்கவிட்டு சமூக பொறுப்புணர்வின்றி அச்சமில்லாமல் குடிமகன்கள் மதுவை வாங்கி சென்றனர்.
இதைப்போல 144 தடை உத்தரவு நேற்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்த நிலையில் மயிலாடுதுறையில் அத்தியாவசிய கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பேருந்து நிலையத்தில் ஊருக்கு செல்லமுடியாமல் ஏராளமான பயணிகள் காத்துக்கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒருசில தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களை இயங்குகின்றன. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஏராளமானோர் செல்வதை காண முடிகிறது. காவல் துறையினர் பொதுமக்களை வீடுகளுக்கு செல்லுமாறும் வீட்டைவிட்டு வெளியேறாதிர்கள் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் மயிலாடுதுறை பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி வருகிறது.