நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின்.பி நாயர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரெத்தினம் ஆகிய இருவரும் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஆட்சியர் பிரவின் பி நாயர் கூறுகையில், "சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து நாகை மாவட்டத்திற்கு வருகை தந்து தனிமைபடுத்தப்பட்டுள்ள 400 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 150 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. மீதமுள்ளவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
மேலும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் எட்டுக்குடி முருகன் கோயில், நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில், நாகை சட்டநாதர் சுவாமி கோயில், திருமருகல் இரத்தின கிரீஸ்வரர் கோயில், சித்தாய்மூர் சுவர்ணதாபனேஸ்வரர் கோயில், கருவாழக்கரை காமாட்சியம்மன் கோயில், திருவெண்காடு சுவாதேரனேஷ்வரர் கோயில் ஆகிய ஏழு கோயில்களின் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள், பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. வழக்கமான அபிஷேகங்கள் மட்டுமே கோயில்களில் நடைபெறும்." எனக் கூறினார்.