நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு மற்றும் தோழமை அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் த.ஜெயராமன் கலந்து கொண்டு தலைமை வகித்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அரசு ஜனவரி 15ஆம் தேதி ஐந்தாவது சுற்று ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த ஏலத்தில் காவிரிப்படுகையில் உள்ள புதுச்சேரி, கடலூர், நாகை, காரைக்கால் பகுதியின் கடற்பகுதியில் 4 ஆயிரத்து 64 சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலம் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கத் தரப்படுகிறது. இவை நடைமுறைப்படுத்தப்பட்டால் கடல் பகுதி, நிலப்பகுதி ஆகியவை மக்கள் வசிக்க முடியாத பகுதிகளாக மாறிவிடும்.
இதேபோல், கிழக்கு கடற்பகுதியில் மீன்கள் இல்லாத கடல் பகுதியாக மாறும், மீன் வளம் அழியும், மீன்கள் இப்பகுதியை விட்டு வெளியேறும். மீனவர்களின் மீன்பிடித் தொழில் அழிந்துபோகும். மேலும் ஏராளமான எண்ணெய் கிணறுகள் அமைக்கப்படுவதால் மீனவர்களின் படகுகள், கப்பல்கள் இப்பகுதியில் செல்ல அனுமதிக்கப்படாது.
இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை 2006 இல் மாற்றம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்க இனி சுற்றுச்சூழல் அனுமதி அவசியம் இல்லை என்றும், மக்களிடம் இனி கருத்து கேட்பு நடத்தத் தேவையில்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.