நாகை திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கௌதமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, 'நாகை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தை அப்போதைய திமுக அரசு 2010ஆம் ஆண்டில் கொண்டு வந்தது. 80 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்ள தற்போதைய மத்திய அரசு 396 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
இந்நிலையில் இதனை ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனம் 8 முறை ஒப்பந்தத்தை தள்ளி வைத்தது. இதனால் நாகை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமானது. இதன் காரணமாக இந்த சாலையைப் பயன்படுத்த முடியாமல், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் நாகை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக தொடங்காததால், நாகையில் இருந்து தஞ்சை, திருவாரூர் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லும் நோயாளிகள் பாதியிலேயே உயிரிழக்கும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.
மேலும், மீன்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் இந்த சாலையைப் பயன்படுத்த முடியாதவாறு பெரும்பாதிப்பை சந்திப்பதுடன், விவசாயிகள் விளைவித்த நெல்மணிகளை லாரிகள் மூலம் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்கும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
எனவே, தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலைப் பணியின் ஒப்பந்தங்களை தள்ளிப்போடாமல் விரைந்து தொடங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பணிகளை விரைந்து தொடங்கவில்லை என்றால், அரசுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து திமுக தலைமையில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்' என எச்சரித்தார்.