தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுருக்குமடி வலை விவகாரம் - மீனவர்கள் பேச்சுவார்த்தை

மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை மீறி தொழில் செய்பவர்களை மாவட்ட நிர்வாகம் தடுக்கவில்லையென்றால் அவர்களை சிறைபிடிப்போம் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீனவர்கள் ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை
மீனவர்கள் ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை

By

Published : Jul 20, 2021, 9:57 AM IST

மயிலாடுதுறை: சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும், அவ்வாறு அனுமதிக்காதபட்சத்தில் தமிழ்நாடு அரசு மீன்பிடித்தொழில் ஒழுங்குமுறை சட்டம் 1983-இன் படி தடைசெய்யப்பட்ட 21 வகையான சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பூம்புகார், சந்திரபாடி, திருமுல்லைவாசல், மடவாமேடு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்கள் கடந்த ஜூலை 17 ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர் ஆய்வு

இந்நிலையில், நேற்று (ஜூலை 19) நாகப்பட்டிணம் மாவட்டத்தில் ஆய்வு செய்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தடை செய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்குமடி வலைகள் விவகாரத்தில் சுமூகத் தீர்வு ஏற்பட அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மீனவர்களிடம் பேசி முடிவு எடுப்பார்கள் என்று தெரிவித்தார்.

மீனவர்கள் ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை

ஆட்சியருடன் பேச்சுவார்த்தை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் மீனவர்களுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், அரசு அலுவலர்கள் 13 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவ பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.

அலுவலர்கள் தெளிவுபடுத்த வேண்டும்

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திருமுல்லைவாசல் மீனவ கிராம தலைவர் காளிதாஸ், " மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை மீறி தொழில் செய்பவர்களை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், அவர்களை நாங்களே சிறைபிடிக்க நேரிடும் என முறையிட்டோம்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கிராம மக்களிடம் அலுவலர்கள் நேரடியாக வந்து தெளிவுபடுத்தினால் மட்டுமே போராட்டத்தை வைவிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும். பேச்சுவார்த்தைக்கு மக்கள் பிரதிநிதியாக வந்திருக்கக்கூடிய நாங்கள் எந்த முடிவையும் எடுக்க முடியாது. சுருக்குமடி வலை பயன்படுத்துவது குறித்து உயர் அலுலர்களிடம் பேசியுள்ளோம், கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளனர்" என்றார்.

சட்டத்தை மீறுவோர் மீது நடவடிக்கை

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் லலிதா கூறுகையில், " கூட்டத்தில் மீனவ பிரதிநிதிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டுள்ளது. இதனை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மீன்பிடித் தொழில் தொடர்பாக அரசால் தடைசெய்யப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சுருக்குமடி வலைக்கு அனுமதி கேட்டு மீனவர்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details