தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆதரவற்றோர் உடல்களை சொந்தச் செலவில் அடக்கம் செய்யும் மாமனிதர்!

நாகை: ஆதரவற்றோரின் உடல்களுக்கு சொந்தச் செலவில் இறுதிச்சடங்கை நடத்தி அடக்கம் செய்யும் நாகையைச் சேர்ந்த மனிதரின் செயல் காண்போரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

By

Published : Aug 3, 2019, 5:26 PM IST

body

சாலையோரத்தில் கால்நடைகள் இறந்துகிடந்தாலே எளிமையாக கடந்து செல்வோர் வாழும் இவ்வுலகில் ஆதரவற்று உயிரிழந்து கிடக்கும் மனித சடலங்களை தனது சொந்தச் செலவில் அடக்கம் செய்து வருகிறார் நாகையைச் சேர்ந்த தொண்டுள்ளம் படைத்த ஒருவர். ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்வதற்கு மருத்துவமனை, காவல் துறையினர், அரசு அலுவலர்கள் என அனைவரின் பங்களிப்பும் தேவை. இவர்களின் பார்வைக்கு அப்பால் செய்வது சட்டப்படி குற்றமாகும். இவ்வாறு இருக்கும்பட்சத்தில் நாகையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற நபர் ஆதரவற்ற சடலங்களை தனது சொந்த செலவில் அடக்கம் செய்துவருகிறார்.

சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் ஆதரவற்று கிடந்த சடலத்தை யாரும் கண்டுகொள்ளாமல் சென்றதைப் பார்த்து மனம் வெதும்பிய ராஜேந்திரன், ஆதரவற்ற சடலங்களை தனது சொந்த செலவில் அடக்கம் செய்ய முடிவெடுத்தார். அதன்படி இதுவரை அவர் 800க்கும் மேற்பட்ட பூத உடல்களை சாதி, மத பேதமின்றி தனது சொந்த செலவில் சடங்கு சம்பிரதாயங்களுடன் அடக்கம் செய்து சத்தம் இல்லாமல் சேவையாற்றி வருகிறார்.

ராஜேந்திரன்

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட குழந்தைகள், ஆதரவற்று வீட்டைவிட்டு வெளியேறி விரக்தியில் உயிரிழந்தவர்கள், நோய் வாய்பட்டு மருத்துவமனை, பொது இடங்களில் உயிரிழந்த முதியவர்கள், இறுதி சடங்கு செய்ய வழியில்லாதச் சடலங்களை முறைப்படி இறுதிச் சடங்குகளை செய்து அடக்கம் செய்கிறார் இந்த சமூக சேவகர்.

உலகில் அனாதை என்று யாருமே இல்லை என கூறும் ராஜேந்திரன், கோவில் குளங்களை கட்டி கும்பாபிஷேகம் செய்த தமக்கு கிடைக்காத சந்தோசம் எண்ணற்ற ஆதரவற்றவர்களை அடக்கம் செய்வதில் மன நிறைவு அளிப்பதாகக் கூறுகிறார். இதற்கென தனி அலுவலகம் அமைத்துள்ள ராஜேந்திரன், உயிரிழந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்க்காக பன்னீர், விபூதி, சாம்பிராணி, ஊதுபத்தி உள்ளிட்ட பூஜை பொருட்களை எப்பொழுதும் தயார் நிலையில் வைத்துள்ளார்.

சொந்தசெலவில் அனாதை உடல்களை அடக்கம் செய்யும் ராஜேந்திரன்

நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி, நாகூர் என சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனாதையாக உயிரிழக்கும் உடல்களை மீட்கும் ராஜேந்திரன் நாகையில் உள்ள இடுகாடுகளில் அடக்கம் செய்கிறார். இவரின் செயலை கண்டு வியக்கும் அப்பகுதி மக்கள் ராஜேந்திரனின் சமூக பணிக்கு தோள்கொடுத்து நிற்பதாகவும், கடந்த ஏழு ஆண்டுகளாக எந்த நன்கொடையும் பெறாமல் தனது சொத்துக்களை விற்று உடல்களை இவர் அடக்கம் செய்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும், ஏழு ஆண்டுகளாக இவராற்றிய சேவைக்கு அவரிடம் உள்ள புகைப்படங்களே சான்றாக உள்ளன. தமிழ்நாடு அரசு இதுபோன்ற மனிதநேயமிக்க மாமனிதர்களை ஊக்கப்படுத்தும் விதமாகப் பாராட்டி கௌரவிக்க வேண்டுமெனவும் மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details