உலகை அச்சுறுத்தும் கரோனா வைரசைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதில் சென்னையில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வெளிமாவட்டங்களுக்குச் சென்றால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுவருகிறார்கள்.
அந்த வகையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களிலிருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும் வருபவர்கள் மாவட்ட எல்லையில் பரிசோதனை செய்யப்பட்டு 15 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுவருகின்றனர்.
அதில் அரசு மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால், அருகில் உள்ள மன்னம்பந்தல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுவருகின்றனர்.
தனிமைப்படுத்தல் அரங்கில் அடிப்படை வசதிகள் இல்லை: பொதுமக்கள் குற்றச்சாட்டு! இந்நிலையில் அந்தத் தனியார் கல்லூரி விடுதியில் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்காமல் இருப்பதாகவும், தனிமைப்படுத்தப்பட்ட நபர்களில் ஒருவருக்கு கரோனா தீநுண்மி தொற்று உறுதிசெய்யப்பட்டு பல மணிநேரம் ஆகியும் அந்த நபரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாமல் அலைக்கழிப்பதாகவும் குற்றஞ்சாட்டி சமூக வலைதளத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்தக் காணொலி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க...தென்காசியில் பள்ளிவாசல் உண்டியலை உடைத்து திருட்டு: இருவர் கைது!