தமிழ்நாடு அரசின் ஆணையின் படி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கருவாழக்கரை மேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் (அழகு ஜோதி அகடமி) மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் தாலுக்காகளுக்கு உட்பட்ட பள்ளிகளின் பேருந்துகள், வேன்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அரசு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள்!
நாகை: மயிலாடுதுறை அருகே கருவாழக்கரை மேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து அரசு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்த சோதனையில், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் கண்மணி கலந்துகொண்டு வாகனங்களை ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் வாகனங்களுக்கு முறையான ஆவணங்கள் உள்ளதா என்றும் ஒவ்வொரு வாகனத்திலும் வேகக்கட்டுப்பாட்டு கருவிகள், முதலுதவி வசதிகள் அவசரகால வழிகள், இருக்கைகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் குறித்தும் முழுவதுமாக ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் முடிவில் குறைபாடுகள் உள்ள வாகனங்களை உடனே சரி செய்யவும் பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டது. மயிலாடுதுறை கோட்டத்தில் ஓடும் 314 வாகனங்களில் 284 வாகனங்கள் சோதனைக்காக கொண்டுவரப்பட்டன. இதில் குறைபாடுகள் உள்ள 26 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது.