மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி பாமக வேட்பாளர் பழனிசாமியை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
எம்.ஜி.ஆர். தொடர்ந்து பத்து ஆண்டுகளாக முதலமைச்சராகப் பணியாற்றினார். அதன்பின் பல ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அதிமுக பத்து வருடங்களால் ஆட்சி செய்துள்ளது.
தமிழ்நாட்டு மக்கள், விவசாயிகளின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றும் வகையில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆட்சி செய்து வருகின்றனர். வெளிமாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதனால் தான் பாஜக, பாமக, தமாகா ஆகிய கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
ஜி.கே வாசன் தேர்தல் பரப்புரை மயிலாடுதுறை மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையான புதிய மாவட்டத்தை அதிமுக அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. தமிழ்நாட்டின் முதன்மை மாவட்டமாக மயிலாடுதுறை மாறுவதற்கு வரும் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வெற்றிபெற வேண்டும். மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம், புறவழிச்சாலை, தொழில்பேட்டை ஆகியவை அமைக்க வேட்பாளர்கள் முயற்சி மேற்கொள்வார்.
அதிமுக அரசு விவசாயிகளை சார்ந்த அரசு என்பதால், விவசாயிகளின் எண்ணங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் வகையில், பயிர்க்கடன், நகைக்கடன் தள்ளுபடி செய்து மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமும் வழங்கியுள்ளது. சட்டப்பேரவைக்கு வராத ஒரே கட்சி திமுகதான். சட்டப்பேரவை வாசலில் காலை வைத்துவிட்டு மக்கள் பிரச்னைகளைப் பற்றி சட்டப்பேரவையில் விவாதிக்காமல் வெளிநடப்பு செய்து காலத்தை ஓட்டியவர்கள் திமுகவினர். மக்கள் பிரச்னைகளை பேசித்தீர்க்காத அவர்கள், இரண்டாவது அணியாக இருந்துகொண்டு மக்களிடம் ஓட்டு கேட்கின்றனர். இந்தத் தேர்தலுக்கு பிறகும் திமுக இரண்டாவது அணியாகத்தான் இருக்கும். அதிமுக கூட்டணி ஆட்சியை அமைக்கும்” என்றார்.