திருவாரூர்:தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் நேற்று (பிப்ரவரி 10) இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது.
இதன் எதிரொலியாக புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவரும் நிலையில் அதன் ஒரு பகுதியாகக் காரைக்கால் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதலே இருந்து தற்போதுவரை கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.
கனமழை
இதில் குறிப்பாகக் காரைக்கால், நிரவி, திருபட்டினம், வரிச்குடி, பூவம், வாஞ்சூர், நேரு நகர் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் கனமழை பெய்தது. இந்தத் திடீர் மழையால் சம்பா சாகுபடி செய்து அறுவடை தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கும் இடர் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர்.
மேலும், இந்த திடீர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம், குடவாசல், அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் விடியற்காலை முதல் தொடர்ந்து லேசானது முதல் மிதமான மழை அவ்வப்போது கனமழையும் பெய்துவருகிறது.
டெல்டா மாவட்டங்களுள் ஒன்றான அப்பகுதியில் பெரும்பாலானோர் விவசாயத்தையே தங்களின் முழு வாழ்வாதாரமாக நம்பியுள்ளனர். மேற்கொண்டு விவசாயம் சார்ந்த பணிகளே இம்மாவட்டத்தில் முக்கியத்துவமானதாக உள்ளது.
மழையில் நெல்மூட்டைகள்
பெய்துவரும் மழையால், நன்னிலம் அருகே உள்ள மூலமங்கலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 15 நாள்களாக விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட அறுவடை செய்த நெற்பயிர் மூட்டைகளைத் தேக்கிவைத்துள்ளனர்.
இதனை அடுத்து, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் தார்பாய் இல்லாததால் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதால் உடனடியாக அனைத்து நெல் மூட்டைகளையும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
அரசுக்கு கோரிக்கை
தமிழ்நாடு அரசு மதுபான விற்பனைக்கு (டாஸ்மாக்) தரும் முக்கியத்துவத்தை இதுபோன்ற நேரங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறையான பராமரிப்பின்றி இருக்கும் நெல் மூட்டைகளையும் பாதுகாக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: திகைக்கவைக்கும் திமுக உள்குத்து! அணிகளால் உருவான பிணி