தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 4, 2021, 10:04 AM IST

Updated : Jan 4, 2021, 12:59 PM IST

ETV Bharat / state

பொங்கல் பரிசுத் தொகுப்பு: கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி!

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தின் கீழ் கரும்பு ஒன்றுக்கு ரூ.15 வழங்கப்படுவதால் மயிலாடுதுறை மாவட்ட கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tamilnadu Pongal gift package
Tamilnadu Pongal gift package

தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படும் என்று அண்மையில் அறிவித்தார். இந்த அறிவிப்பு கரும்பு விவசாயிகளின் வரவேற்பைப் பெற்றது.

ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 4,78,549 குடும்ப அட்டைதாரர்களுக்கு 585 முழுநேர, 151 பகுதிநேர நியாயவிலைக்கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி இன்று(ஜன 4) தொடங்கியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட கரும்பு விவசாயிகள்

இந்நிலையில், கூட்டுறவுத்துறையினர் கடந்த ஐந்து நாள்களாக கரும்புகளை கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபடடுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மன்னம்பந்தல், வானாதிராஜபுரம், செம்பதனிருப்பு, திருமணஞ்சேரி, திருவாலங்காடு, அல்லிவிளாகம், கீழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பொங்கல் கரும்பு விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இம்முறை விவசாயிகளிடம் இருந்து அரசே நேரடியாக கொள்முதல் செய்வதால் இடைத்தரகு இல்லாமல் கரும்பு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வானாதிராஜபுரம் கிராமத்தில் மட்டும் விவசாயிகள் சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.

இக்கிராமத்தில் இருந்து மட்டும் மாவட்டத்துக்குத் தேவையான 5-இல் ஒரு பகுதி கரும்புகளை, அதாவது சுமார் 1 லட்சம் கரும்புகளை அரசு கொள்முதல் செய்துள்ளது. வழக்கமாக, இக்கிராமத்தில் சாகுபடி செய்யப்படும் கரும்புகளை தனியார் வியாபாரிகள் விவசாயிகளின் கரும்புத் தோட்டத்திற்கே சென்று வெட்டி, ஏற்றிச் சென்றுவிடுவார்கள்.

தற்போது, அரசே கொள்முதல் செய்வதால், கரும்புகளை வெட்டி, டிராக்டர்கள் மூலம் கொண்டு சென்று லாரிகளில் ஏற்றும் வரையிலான பொறுப்பு விவசாயிகளை சேருகிறது.

கரும்புகளை விளைவித்துவிட்டு, பொங்கல் பண்டிகைக்கு சில நாள்களுக்கு முன்பு வரை வியாபாரிகளின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்த நிலை மாறி, அரசு முன்கூட்டியே கொள்முதல் செய்துகொள்வதால் இத்திட்டத்திற்கு ஒட்டுமொத்த விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சுமார் 20 விழுக்காடு கரும்புகளை அரசு முன்கூட்டியே கொள்முதல் செய்துவிட்டதால் மீதமுள்ள கரும்புகளை எளிதில் தனியாரிடம் விற்றுவிடலாம் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கடைசி நேரத்தில் மழை பெய்யாமல் இருந்தால் அரசுக்கு கொடுக்கும் விலையைவிட கூடுதல் விலைக்கு தனியாரிடம் விற்பனை செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர். மொத்தத்தில், அரசின் பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கும் திட்டம் ஒட்டுமொத்த கரும்பு விவசாயிகளின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு விநியோகம்: தயார்நிலையில் ரேஷன் கடைகள்!

Last Updated : Jan 4, 2021, 12:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details