நாகை, கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஈரான் நாட்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடித் தொழிலுக்காகச் சென்றனர். தமிழ்நாடு மீனவர்கள் அனைவரும் படகுகள் மூலம் அங்குள்ள தீவுகளில் இந்தத் தொழிலைச் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் ஈரானில் கோவிட்-19 அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக அந்நாட்டு அரசு விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. இதனால் மீனவர்கள் நாடு திரும்ப முடியாமல் ஈரானில் சிக்கியுள்ளனர். அதோடு, அங்கு உணவு இல்லாமலும், கடல் நீரை காய்ச்சி குடிநீராகப் பயன்படுத்தி வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மீனவர்கள் உணவின்றி தவிப்பு மேலும் தங்களை காப்பாற்றும்படி மத்திய அரசிடம் வீடியோ மூலம் கோரிக்கையும் வைத்தனர். இதில் முதற்கட்டமாக 50 பேர் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள நாகை, கடலூர், கன்னியாகுமரி மீனவர்களை மீட்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தாரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனிடையே நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மீனவர்களின் உறவினர்கள் அங்கு கண்ணீர் மல்க தங்கள் உறவினர்களை மீட்க வேண்டும் எனக் கதறி அழுதனர். அதனைத் தொடர்ந்து நாகை மாவட்ட ஆட்சியரிடம் நாகூர், கீச்சாங்குப்பம், விழுந்தமாவடியைச் சேர்ந்த மீனவர்களின் உறவினர்கள் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: கரோனா அச்சம்: உணவு விடுதிகளில் ஆய்வு