மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மங்கைநல்லூர் அருகே கழனிவாசல் கிராமம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் (60), இவர் விவசாயி.
இரவு வீட்டைப் பூட்டிவிட்டு பால்ராஜ் அவரது தாயார், மனைவி விஜயா ஆகியோர் தூங்கியுள்ளனர். நள்ளிரவில் ஏதோ சத்தம்கேட்டு பால்ராஜ் எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.
பீரோவைத் திறந்து சிலர் நகைகளை எடுப்பது தெரிந்து அவர்களைத் தடுக்க முயன்றபோது கொள்ளையர்கள் பால்ராஜை சரமாரியாகத் தாக்கி கையை முறித்துள்ளனர்.
அதனைக் கண்ட அவரது மனைவி விஜயா கணவரைக் காப்பாற்ற போராடியபோது அவரையும் தாக்கி அவர் அணிந்திருந்த தாலிசெயினை பறிக்க முயன்றனர்.
அப்போது, அவர் போராடியதில் பாதி தாலி செயினை மீட்டதில் அவரது கழுத்தில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் கணவன் மனைவி இருவரும் போராடி கொள்ளையர்கள் பீரோவிலிருந்து எடுத்த ஏழு பவுன் நகையை மீட்டனர்.
சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வருவதை அறிந்து கொள்ளையர்கள் ரூ.50 ஆயிரம், ஐந்து பவுன் தாலி செயினுடன் தப்பிச் சென்றனர். கிராமத்தில் நள்ளிரவில் வீட்டிலிருந்த தம்பதியரைத் தாக்கி நகைகள் பறித்த சம்பவம் பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.