தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அழிந்து வரும் தற்காப்புக் கலை: மாணவர்களுக்கு கற்று கொடுக்கும் 'குஸ்தி' வாத்தியார்

நாகப்பட்டினம்: நாகரிக வளர்ச்சியால் அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை 80 வயது நிறைந்த குஸ்தி வாத்தியார் ஒருவர் மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதன் மூலம் புத்துயிர் அளித்து வருகிறார்.

By

Published : Aug 9, 2020, 2:52 PM IST

Updated : Aug 10, 2020, 7:21 PM IST

ganapathy
ganapathy

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை கோட்டத்தில் ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி உள்ள மாணவர்களுக்கு முதியவர் ஒருவர், தான் கற்று தேர்ந்த பாரம்பரியமிக்க தற்காப்பு கலைகளை வளர்க்கும் விதமாக தள்ளாத வயதிலும் இலவசமாக கற்றுத் தந்து தன்னம்பிக்கையுடன் புத்துணர்ச்சியை ஏற்படுத்தி வருவது கிராம மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் தமிழர்களின் பண்பாடு பரந்து விரிய முக்கிய காரணமாய் திகழ கலைகளும் ஒன்று. ஒயிலாட்டம், மயிலாட்டம், தற்காப்பு கலை, தீப்பந்தம், சிலம்பாட்டம், தேவராட்டம் தமிழ்ச் சமூகத்தின் ஆணிவேராக உள்ளது. தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றி பிணைந்து கிடக்கிறது. வழிபாட்டிற்கு வழிகாட்டியாக இருக்கும் கலைகள் இன்று மெல்ல மெல்ல அழியத் தொடங்கிவிட்டன.

இன்றைய தலைமுறையினர் இப்படியொரு கலை இருப்பதே தெரியாத அளவிற்கு நகர வாழ்க்கையை நோக்கிச் சென்றுவிட்டனர். செல்போன் மீதான மோகத்தில் கலையை வளர்க்கும் ஆர்வம் குறைந்துவிட்டது. கணினியிலும், சமூகவலைதளங்களிலும் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் நேரத்தை செலவழிக்கின்றனர். இதனால், மனதளவில் பாதிப்புகளை சந்திக்கும் சூழலும் ஏற்படுகிறது.

ஆனால், தற்காப்பு கலை நாம் அனைவரும் கற்க வேண்டிய ஒன்று. எந்தவொரு சூழலிலும் தனிமனித பாதுகாப்பு அவசியம் தேவைப்படுகிறது. தன்னை தாக்க வருவோரிடமிருந்து தற்காத்து கொள்ள அவசியம் பயிற்சி தேவை. இதுபோன்ற கலைகள் செல்போனிலும், கணினியிலும் கற்க முடியாது. உடல் உழைப்பு மட்டுமல்ல மனதை ஒருநிலைப்படுத்தும் கலையாகவும் இருக்கிறது. அழிந்து வரும் இந்தக் கலைக்கு புத்துயிர் அளித்து கணபதி என்ற குஸ்தி வாத்தியார், இந்த தள்ளாத வயதிலும் இளைஞர்களை போல் துடிப்புடன் மாணவர்களுக்கு பயிற்சிளித்து வருகிறார்.

அரிவாள் சுழற்றும் இளைஞர்கள்

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கருவாழக்கரை மேலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி (81). தனது 12ஆவது வயதில் சிலம்பம் கற்க தொடங்கியதிலிருந்து தற்காப்பு கலையின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால், ஐந்தாம் வகுப்போடு பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு முழுநேரமும் தற்காப்புக் கலைகளை கற்று வந்தார். குஸ்தி, மருவு, சுருள், அருவா சுற்றுதல், அருவாவெட்டிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுதல், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய பிரிவில் உள்ள கலைகளை பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கற்றுத் தேர்ந்தார்.

சிலம்பு சுற்றும் மாணவர்கள்

தனது 22ஆவது வயதிலேயே மாணவர்களுக்கு தற்காப்பு கலையை பயிற்றுவிக்கும் குருவாக தேர்ந்து கணபதி வாத்தியார் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டார். தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக தற்காப்பு கலையை கட்டணம் பெறாமல் இலவசமாக கற்றுத் தருவதையே முழுநேர தொழிலாக செய்து வருவது பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது.

இது குறித்து குஸ்தி வாத்தியார் கணபதி கூறியதாவது, "ஏழு வயது முதல் 35 வயது வரை உள்ள சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தற்காப்பு கலைகளை கற்று கொடுத்திருக்கேன்.

வயது முதிர்வு காரணமாக கடந்த சில வருடங்களாக பயிற்சியளிப்பதை நிறுத்தியிருந்தேன். கரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

இந்தச் சூழலில், வயது முதிர்வையும் பொருட்படுத்தாமல், தனது வீட்டினருகே வசிக்கும் 5 மாணவர்களை அழைத்து கடந்த நான்கு மாதங்களாக தற்காப்பு கலையை கற்று கொடுத்து வருகிறேன்.

ஆரம்பத்தில் தயங்கிய மாணவர்கள் பிறகு ஆர்வத்துடன் கற்றுகொண்டனர். நாகபாஷம் என்ற கம்பு விளையாட்டு, மந்தை, கோட்டை, காளி ஆகிய குத்து விளையாட்டு, ஆகிய பயிற்சியால் ஈர்க்கப்பட்டு தற்போது நாள்தோறும் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்று வருகின்றனர்.

குஸ்தி வாத்தியார் கணபதி

1981ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் தற்காப்பு கலையை செய்துகாட்டும் வாய்ப்பை பெற்றேன். நடிகை பானுப்பிரியா கதாநாயகியாக அறிமுகமான மண்ணின் மைந்தர்கள் படத்திற்கு சண்டைப்பயிற்சி மாஸ்டராக பணியாற்றினேன். பல காரணங்களால் படம் வெளியாகவில்லை.

அழிந்து வரும் தற்காப்புக் கலை: மாணவர்களுக்கு கற்று கொடுக்கும் 'குஸ்தி' வாத்தியார்

தற்போது, தற்காப்பு கலைகள் அழிவை நோக்கி செல்வதால், மாணவர்கள் இந்த கலைகளை கற்றால் தன்னம்பிக்கை பெற முடியும். தற்காப்பு கலைகளை வளர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க:அரசு கொடுத்த வாக்குறுதி செல்லா காசு: வீடின்றி தவிக்கும் மலைவாழ் மக்கள்

Last Updated : Aug 10, 2020, 7:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details