மயிலாடுதுறை மாவட்டத்தில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்யாமல் நகராட்சி துறையினர் பல்வேறு இடங்களில் கொட்டி, அவ்வப்போது தீ வைத்து கொளுத்தி வருகின்றனர். குறிப்பாக, தருமபுரம் நந்தவனம் சுற்றுச்சுவர் அருகே சாலை ஓரத்தில், குப்பைகளை கொட்டி தீ வைத்து கொளுத்துவதை நகராட்சி ஊழியர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் அப்பகுதியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
நகராட்சியின் அலட்சியப் போக்கு.. தீக்கிரையான 7 ஏக்கர் வாழைமரங்கள்..
மயிலாடுதுறை: நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால், ஏழு ஏக்கரில் பயிரிடப்பட்டு சாகுபடிக்கு தயாராக இருந்த வாழைமரங்கள் தீக்கிரையாகின.
இன்றும் அப்பகுதியில் குப்பைகளுக்கு தீ வைத்ததால், நந்தவனத்தின் சுவற்றின் ஓரம் இருந்த வாழைமர இலையின் காய்ந்த சருகுகளில் பற்றிக்கொண்ட தீ, மளமளவென்று காற்றின் வேகத்தில் வாழைதோப்பின் நான்கு திசைகளிலும் பரவியது. வாழை தோப்பு பற்றி எரிவதைக் கண்ட தேர்தல் பறக்கும்படை அலுவலர், தனி வட்டாட்சியர் விஜயராகவனுக்கு தகவல் அளித்தார்.
அதன் பேரில், மயிலாடுதுறை தீயணைப்பு படையினர் இரண்டு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர். ஏழு ஏக்கர் அளவிலான இந்த வாழை தோப்பை பாலகுரு என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைமரங்கள், நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் தீக்கிரையாகியுள்ளது.