உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 463ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாகை மீரா பள்ளி வாசலில், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட கொடிகள் துவா ஓதப்பட்டு, கப்பல் வடிவ ரதம், பீங்கான் ரதம், பெரிய ரதம், சின்ன ரதம், செட்டிப்பல்லக்கு உட்பட 5 ரதங்களில், ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டது.
தாரைத்தப்பட்டைகள் முழங்க நாகை மீராப்பள்ளி வாசலில் இருந்து புறப்பட்ட ரதங்கள், நாகையின் முக்கிய வீதிகளில் வலம் வந்து, நாகூர் தர்கா அலங்கார வாசலை வந்தடைந்தது. பின்னர் சிறப்பு துவா ஒதப்பட்டு ஐந்து மினாராக்களிலும் ஒரே நேரத்தில் கொடிகள் ஏற்றப்பட்டன. அப்போது வான வேடிக்கைகள் விண்ணை அலங்கரிக்க, வண்ண விளக்குகளால் ஜொலித்த தர்கா மினாராக்களைக் கண்டு அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.