மதுரை:எம்.கே. புரம் பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்த அக்னிராஜ் (27), கொத்தனாராக வேலை பார்த்துவந்தார். இந்நிலையில் அக்னிராஜ் நேற்று (ஜனவரி 30) இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு நண்பர்களோடு வெளியில் சென்றுள்ளார். அதற்குப் பிறகு அக்னி ராஜ் வீடு திரும்பவில்லை.
இதற்கிடையே ஜீவா நகர் 2ஆவது தெரு கணேசன் சாலைப் பகுதியில் உள்ள ஒயின்ஷாப் கடையின் பின்புறம் அக்னி ராஜ் படுகாயங்களுடன் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. நிகழ்விடத்திற்குச் சென்ற உறவினர்கள் அக்னி ராஜை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனாலும் வழியிலேயே அக்னிராஜ் இறந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து காவல் துறைக்குப் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் ஜெய்ஹிந்த்புரம் காவலர்கள் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அக்னிராஜின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.