தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்குரைஞர் திருக்குமரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில் ,"மதுரை விமான நிலையம் பன்னாட்டு விமான நிலையமாக உள்ளதால், இங்கு உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். இவர்களை வரவேற்பதற்காகவும் அழைத்து செல்வதற்காகவும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த விமான நிலையத்தினை தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த விமான நிலையத்திற்குள் செல்லவும், உள்ளிருந்து வெளியே வரவும் இரண்டு பாதைகள் மட்டுமே உள்ளன. இதனால் நெருக்கடி ஏற்படுவதுடன், விமானத்தைப் பிடிக்கச் செல்பவர்களும், அழைத்து வர செல்பவர்களும் அவதிப்படுகின்றனர்.
அத்தோடு இது கால விரயத்தையும் ஏற்படுத்துகிறது. மேலும் இங்கு வரும் விஐபிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் ஏராளமானோர் கார்களில் வந்து, முறையற்ற வழியில் விமான நிலையத்தின் வெளியே ஏராளமான கார்களை நிறுத்தி செல்கின்றனர்.
இதனால் அவசரமாக விமானத்தைப் பிடிக்க செல்பவர்களும் வெளியேற நினைப்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே விமான நிலையம் மட்டுமல்லாது பெருங்குடியிலிருந்து விமான நிலையத்திற்குள் செல்லும் பாதையை 4 வழிச் சாலையாக மாற்றி சீர்படுத்துவதுடன், கூடுதல் அகலப் பாதைகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும். மேலும், விமான நிலையத்திற்கு வி.ஐ.பிக்கள், அரசியல்வாதிகளுடன் வந்து செல்லும் வாகனங்களை நெறிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.