மதுரை மாவட்டம், விளக்குத்தூண் பகுதியிலுள்ள நவபத் கானா தெருவில், ஒரு பழைய கட்டடத்தில் துணிக்கடை ஒன்று இயங்கி வந்தது. இந்த கடையில் இன்று (நவ.14) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், மதுரை நகர், அனுப்பானடி ஆகிய நிலையங்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்தக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் சிக்கிய தீயணைப்பு வீரர்கள் கிருஷ்ணமூர்த்தி (31), சிவராஜன் (34) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த இடிபாடுகளில் சிக்கிய கல்யாண குமார் (30), சின்னக்கருப்பு (30) ஆகிய இரண்டு தீயணைப்பு வீரர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு அண்மையில்தான் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர், கடந்த ஆண்டு சிறந்த தீயணைப்பு வீரருக்கான விருதை மதுரை மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சொந்தமாய் வீடு கட்டிய பிறகே திருமணம் செய்வது என்பதில் இவர் உறுதியாக இருந்துள்ளார். அந்தக் கனவை நனவாக்கிய நிலையில் அவரது திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் அண்மையில்தான் நடந்து முடிந்துள்ளது.
மாவட்ட ஆட்சியரிடமிருந்து விருது பெறும் கிருஷ்ணமூர்த்தி இந்நிலையில், இன்று (நவ.14) கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மற்றொரு வீரர் சிவராஜன் கடந்த 2009ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் ஆவார். இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது இரண்டாவது குழந்தைக்கு ஒரு வயது முடிய சில நாள்களே உள்ள நிலையில் இவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: மதுரையில் தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் இருவர் உயிரிழப்பு!