மதுரை: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு அலுவலகம் சார்பில் இன்று (டிச. 8) திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் மதுரை மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான திருநங்கைகள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர்.
அவற்றில் இலவச வீடு, வாரிய அட்டை, ரேசன் கார்டு, ஆதார் அட்டை, மாதம் ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர். இந்த முகாமில் கலந்து கொண்டு பேசிய திருநங்கை வசந்தி, "மதுரை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஆயிரம் ரூபாய் மகளிர் உதவி தொகைக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில் ஒரு சிலரை தவிர மற்றவர்களுக்கு வரவில்லை.
நாங்கள் மாதம் ஒரு வீட்டிற்கு வாடகைக்கு குடியேறும் நிலை உள்ளது. திருநங்கை என்றால் யாரும் வாடகைக்கு வீடு தரமறுக்கிறார்கள். அதனால் எங்களுக்கு தொகுப்பு வீடு தர வேண்டும். இதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. நாங்கள் கொடுக்கும் மனுக்கள் குப்பைகளுக்கு தான் போகின்றன. இந்த முறையாவது எங்களது மனுக்களுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்.