உலகம் முழுவதுமுள்ள பறவை நல ஆர்வலர்கள் தங்கள் அருகினில் இருக்கும் பறவைகள் பற்றிய தகவல்களை ஈ பேர்ட் (E bird) என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். இதன்மூலம் பறவைகள் எந்தெந்த மாதத்தில் எந்த இடங்களில் வசிக்கும், பறவைகள் பற்றிய முழு தகவல்களை சேகரிப்பதற்கு இது உதவியாக இருப்பதாக பறவைகள் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தற்போது பொங்கல் விடுமுறையையொட்டி பறவைகள் நல ஆர்வலர்களுடன் இணைந்து திருநகரைச் சேர்ந்த 'ஊர்வன அமைப்பினர்', மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள சேம்மட்டான் கண்மாயில் பறவைகள் பற்றிய கணக்கெடுப்பை நடத்தினர். இந்த கணக்கெடுப்பின்படி, சேம்மட்டான் கண்மாயில் மட்டும் 45 வகையான பறவைகள் வாழ்வதாகத் தெரிவிக்கின்றனர். தற்போது, இந்தப் பறவைகள் குறித்த புகைப்படங்களுடன் கூடிய குறிப்புகளையும் சேகரித்துள்ளனர்.
மேலும், இந்தக் குறிப்புகளை ஈ பேர்ட் இந்தியா (Ebirdindia) என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதாகவும் தெரிவித்துள்ளனர். உலக நாடுகளில் பறவைகள் பற்றிய கணக்கெடுப்பு கிறிஸ்துமஸ் விடுமுறை அன்று நடைபெறும். ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பொங்கல் விடுமுறை நாட்களில் பறவைகள் நல ஆர்வலர்கள் தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற கணக்கெடுப்புகளை நடத்துவதாக ஊர்வன அமைப்பினர் கூறுகின்றனர்.