திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நிரந்தர கடைகள், தரைக்கடைகள், மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகள் என சுமார் மூன்று ஆயிரம் கடைகளுக்கு மேல் செயல்பட்டு வருகின்றன.
இந்தக் கடைகளை குறைக்கும் நோக்கத்தில் மணிகண்டம் அருகே கள்ளிக்குடியில் 77.6 கோடி ரூபாய் செலவில் மத்திய காய்கறி வணிக வளாகம் கட்டப்பட்டது.
ஆனால், கள்ளிக்குடி வணிக வளாகம் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. தற்போது கரோனா பரவல் காரணமாக காந்தி மார்க்கெட் மூடப்பட்டு, பொன்மலை ஜி கார்னர் பகுதியில் தற்காலிக மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், காந்தி மார்க்கெட்டை நிரந்தரமாக மூடவும், கள்ளிக்குடி மார்க்கெட்டை செயல்படுத்தவும் உத்தரவிடக்கோரி திருச்சி மாவட்டம் மனிதவளர் சங்கச் செயலர் கிருஷ்ணமூர்த்தி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "காந்தி மார்க்கெட்டால் கரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது. கள்ளிக்குடி மார்க்கெட்டில் சமூக விலகலை பின்பற்ற போதுமான இடவசதி உள்ளது. இதனால் காந்தி மார்க்கெட்டை திறக்க தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு ,"காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.