ராமநாதபுரம்:அன்னதானத்துக்காக சேதுபதி மன்னர் ஒரு ஊரை தானமாக வழங்கியதைத் தெரிவிக்கும் 350 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே சே.கொடிக்குளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சே.கொடிக்குளம், கழுநீர்பாலமுருகன் கோயில் வளாகத்தில் ஒரு கல்வெட்டு இருப்பதாக பேரையூர் ஆசிரியர் கு.முனியசாமி கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அக்கல்வெட்டை ஆய்வு செய்தார்.
இதுபற்றி கல்வெட்டு ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது, 4½ அடி உயரமும் 1½ அடி அகலமும் உள்ள ஒரு கடற்கரைப் பாறை கல் தூணின் இரண்டு பக்கத்தில் கல்வெட்டும், ஒரு பக்கத்தில் செங்கோல், சூரியன், சந்திரனும் கோட்டுருவமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு மொத்தம் 26 வரிகள் கொண்டது. முதல் பக்கத்தின் தொடர்ச்சியாக அடுத்த பக்கத்தில் வரும் கல்வெட்டு எழுத்துகள் பெரும்பாலும் அழிந்த நிலையில் உள்ளதால் சில சொற்களை கண்டறிய இயலவில்லை.
‘ஸ்வஸ்திஸ்ரீ’ எனத் தொடங்கி ‘போவாராகவும்’ என கல்வெட்டு முடிகிறது. புண்ணிய காலத்தில் ரகுநாத திருமலை சேதுபதி காத்த தேவருக்கும், ஆதினா ராயன் தேவருக்கும் புண்ணியமாக ரகுனாத தேவர் அன்னதான பற்றுக்குக் சே.கொடிக்குளம் என்ற ஊர் சர்வ மானியமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் தமிழ் எண்களில் சக ஆண்டு 1594 சொல்லப்பட்டுள்ளது. இதன் தற்போதைய ஆண்டு கி.பி.1672 ஆகும்.
கி.பி. 1646 முதல் 1676 வரை சேதுநாட்டை ஆண்ட ரகுநாத திருமலை சேதுபதி தனக்கும், ஆதினா ராயன் தேவருக்கும் புண்ணியமாக தன் பெயரில் உருவாக்கிய ரகுநாத தேவர் அன்னதானப் பற்றுக்கு கல்வெட்டுள்ள கொடிக்குளம் என்ற ஊரை தானமாக வழங்கியுள்ளார். அன்னதானப்பற்று என்பது அன்னதானம் செய்யும் மடத்திற்கு தானமாக வழங்கிய உரிமை நிலம் ஆகும். இங்கு மன்னர் ஒரு ஊரையே தானமாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.