திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையை அடுத்துள்ள கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் கூடங்குளம் உள்ளூர் திட்டக்குழுமத்தின் அனுமதியின்றி செயல்படும் கல் குவாரி தொடர்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் திட்டக்குழுமத்தின் ஒப்புதலின்றி இயங்கும் கல் குவாரி - கேள்வியெழுப்பும் நீதிமன்றம்
திருநெல்வேலி மாவட்டம் பொன்னார்குளத்தைச் சேர்ந்த செந்தூர்பாண்டி என்பவர் தொடுத்த மனுவில், "கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றிலும் ஐந்து கிலோமீட்டர் வரை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளுக்குள் குவாரி நடத்துவதற்கான அனுமதி வழங்க கூடங்குளம் உள்ளூர் திட்டக்குழுவின் ஒப்புதல் பெற்ற பின்னரே அனுமதி வழங்க வேண்டுமென அரசாணை உள்ளது.
கூடங்குளத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் 5 கிலோமீட்டர் தொலைவிற்குள் எருக்கன்துறை கிராமம் அமைந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் இந்தக் கிராமத்திற்குள்பட்ட இடங்களில், குவாரி செயல்பாடுகளை மேற்கொள்ள கூடங்குளம் திட்ட உள்ளூர் குழுமத்தின் அனுமதி பெற வேண்டும்.
இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட பகுதியில் சென்னையைச் சேர்ந்த தி ஹைடெக் ராக் புராடக்ட்ஸ் அண்டு அக்ரிகேட்ஸ் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் குவாரி நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்.
ஆனால், கூடங்குளம் உள்ளூர் திட்டக் குழுமத்திடம் இந்த நிறுவனம் குவாரி நடத்துவதற்கான ஒப்புதலைப் பெறவில்லை. கல் குவாரி செயல்படுவதால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், அணுமின் நிலையத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. எனவே உள்ளுர் திட்டக் குழுமத்தின் ஒப்புதல் இன்றி, கூடங்குளத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் செயல்படும் கல் குவாரி செயல்படத் தடைவிதித்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் கூடங்குளம் உள்ளூர் திட்டக் குழுமத்தின் ஒப்புதலின்றி கல் குவாரி நடத்தப்பட்டுவருவது குறித்து அரசு அலுவலர்களிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க தமிழ்நாடு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை மார்ச் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க : பொதுத்தேர்வில் மாணவர்கள் ஸ்கெட்ச், வண்ண பென்சில்கள் பயன்படுத்த தடை