தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “மாநிலத் தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாகும்.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த தேர்தல் நடைமுறை சீர்திருத்தங்கள் தொடர்பான வழக்கில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் குற்றப் பின்னணி, வேட்பாளரின் வாழ்க்கைத் துணை, சார்ந்தவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள், கடன்கள், முதலீடுகள், வேட்பாளர் கல்வித் தகுதி ஆகியவை குறித்து வேட்பு மனுவில் குறிப்பிடுமாறு உத்தரவிட்டது.
தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வேட்புமனு படிவம் உச்ச நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் வழிகாட்டுதல்படி இல்லை. 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்த பிரமாண பத்திரத்தில் எவ்வித மாற்றமும் இன்றி 2019 உள்ளாட்சித் தேர்தலில் பிரமாண பத்திரம் வெளியிடப்பட்டிருந்தது.
மேலும் 2019இல் மாநிலத் தேர்தல் ஆணையத்தை வாக்காளர் பட்டியலையும் வேட்புமனுவையும் இணையதளத்தில் வெளியிடக் கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்த பிறகு, ஆணையம் வாக்காளர் பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டது. ஆனால் வேட்புமனுவை வெளியிடாமல் வேட்பாளர்களைப் பற்றிய சுருக்க விவரத்தை அறிக்கையாக வெளியிட்டிருந்தது.
எனவே உச்ச நீதிமன்றம், இந்தியத் தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள படிவம் 3 ஏ, பிரமாண பத்திரம் ஆகியவற்றில் வேட்பாளர்களின் முழு விவரத்தையும் இணையதளத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும். அதில், வேட்பாளர், மனைவி அல்லது கணவர், சார்ந்தவர்களின் கடந்த ஐந்து ஆண்டு வருமானம், ரொக்க இருப்பு, வங்கி டெபாசிட், விவசாய நிலம், வீட்டு மனை, கட்டிடங்கள், இதர முதலீடுகள், கடன்கள் உள்ளிட்ட விவரங்களையும் அதில் குறிப்பிட உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து மாநிலத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:கஞ்சா வாங்க பணம் தர மறுத்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்!