சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சார்பில் மதுரை குரு திரையரங்கில் இருந்து சொக்கலிங்கநகர் சந்திப்பு வரை எட்டு வழிப்பாலம் அமைக்கப்பட்டுவருகிறது. இந்தப் பாலத்திற்காக சாலையின் இருபக்கங்களிலும் உள்ள 400 மரங்களையும் வெட்டுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதுவரை 50-க்கும் மேற்பட்ட மரங்கள் முதற்கட்டமாக வெட்டப்பட்டுள்ளதாக சூழலியல் செயல்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஸ்மார்ட் சிட்டிக்காக பலிகடாவாகும் 400 மரங்கள்! கிளம்பும் எதிர்ப்புகள்
மதுரை: (ஸ்மார்ட் சிட்டி) சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் காளவாசல் பகுதியில் கட்டப்பட்டுவரும் எட்டு வழிப்பாலத்திற்காக 400 மரங்களை வெட்டுவதற்கு சூழலியல் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சூழலியல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த் கூறுகையில், 'வளர்ச்சி என்னும் பெயரில் அரசே மரங்களை வெட்டி தூய்மைக்கேட்டிற்கு வித்திடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த சில ஆண்டுகளாக மதுரையின் சராசரி வெப்ப அளவு 40-லிருந்து 42 டிகிரி வரை கூடியிருப்பதற்கு மிக முக்கியக் காரணம் மரங்கள் அழிக்கப்பட்டதுதான். மரங்களை வளர்ப்பது மாற்றுத் தீர்வு என்றாலும், இருக்கின்ற மரங்களைக் காப்பாற்றுவது மிகவும் அவசியமான ஒன்று.
மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க பொதுமக்களும், இளைஞர்களும் போராட முன் வர வேண்டும். வெறுமனே முகநூல் பக்கத்தில் கருத்துச் சொல்வதோடு நின்றுவிடக்கூடாது. மக்கள் திரண்டு நின்றால்தான் அரசுக்கும், அலுவலர்களுக்கும் பயம் ஏற்படும்' என்று தெரிவித்தார்.