தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வும் ஒருவகையில் வன்கொடுமைதான்’

மதுரை: 5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வும் ஒருவகையில் வன்கொடுமைதான் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

‘5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வும் ஒருவகையில் வன்கொடுமைதான்’
‘5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வும் ஒருவகையில் வன்கொடுமைதான்’

By

Published : Jan 28, 2020, 11:44 PM IST

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் 5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து சீமான், கடந்த ஐந்து ஆண்டு கணக்கெடுப்பின்படி 10, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை எதிர்கொள்ள அச்சம், தேர்வுக்கு பின்னான தோல்வியின் காரணமாக 81,000 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கே தோல்வியை தாங்கக்கூடிய மன வலிமை வராதபோது, 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறை எவ்வளவு மனச்சிதைவை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இந்த முறை செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் அவசர அவசரமாக இத்திட்டத்தை கொண்டு வருவதற்கு தேவை என்ன இருக்கிறது.

6 வயது முதல் 10 வயது உள்ள குழந்தைகளை உடல்ரீதியாக வன்கொடுமை செய்வது போலதான் இந்தத் தேர்வு அவர்களை மனரீதியாக சிதைக்கும். இதுவும் ஒருவகையில் வன்கொடுமைதான்.

தற்போது தேசத்தை ஆளும் தலைவர்கள் ஒருவராவது 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி உள்ளார்களா.? நாட்டிலுள்ள மேதைகள் அறிஞர்கள் இதுபோன்ற தேர்வு எழுதி உள்ளார்களா.?

மருத்துவத் தேர்வு, அரசு துறைக்கு தேர்வு, இப்படி அனைத்து துறைகளுக்கும் தேர்வு தேர்வு என்றால், நாட்டை ஆளுகின்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் எல்லாம் பதவிகளுக்கு நுழைவுத்தேர்வு எழுதி தகுதிப்பெற்றுதான் வருகிறார்களா.?

நெல் விதை, பூசணி விதைகளை அந்நிய முதலாளிகளுக்கு விற்றவர்கள் பிஞ்சு குழந்தைகளை கூறுபோட மாட்டார்கள் என்று நினைப்பது முட்டாள்தனம்.

ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேவையற்றது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாதிரி தேர்வாக ஒன்பதாம் வகுப்பில் தேர்வு நடத்தும் முறையை அமல்படுத்துவதே போதுமானது என தெரிவித்தார்.

மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்த கேள்விக்கு, டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் முறைகேடுகள் நடந்திருப்பதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். தொடர்ந்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கும்போது, இதனால் உயர் அதிகாரிகள் வரை பாதிக்கப்படுவதோடு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறுகின்றனர். இதிலிருந்து இந்த முறைகேடானது நீண்ட காலமாக நடைபெற்று வருவது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

‘5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வும் ஒருவகையில் வன்கொடுமைதான்’

தற்போது இந்த முறைகேடுகள் வெளிக்கொணரப்பட்டிருப்பது தேர்வு எழுதிய மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில்தான். தேர்வின் மூலம் தகுதியற்றவர்களை பணத்தின் மூலமாக தேர்வு செய்வது, தற்போது தேர்வு முறையும் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது.

இதனால் நேர்மையான முறையில் படித்து தேர்வு எழுதுபவர்களுக்கு என்ன மரியாதை கிடைக்கப்பெறும், மேலும் மேலும் வெறுப்புணர்வை உண்டாக்கும் செயலாகவே இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக பயங்கரவாத செயல்களில் ஈடுபடத் தூண்டும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர்.

இந்தியாவில் அதிக மருத்துவமனை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து எத்தனை மாணவ மாணவியர்கள் மருத்துவ படிப்பு பயில்கின்றனர் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது என சீமான் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details